.

குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு பற்றிய இஸ்லாமிய பார்வை


இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் இயல்பாகவே நேர்வழியைப் பின்பற்றக் கூடிய நிலையில்தான் பிறக்கின்றன.

ஆனால் ஏனைய சில மதக்கோட்பாடுகள் கருதுவது போன்று பிறக்கும் குழந்தைகள் பாவக்கறையோடு பிறக்கின்றன. அல்லது முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப குழந்தையின் பிறப்பு அமைந்து விடுகின்றது எனும் கருத்துக்களை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை.
ஆயினும் குழந்தையின் நடத்தைப் போக்கை மாற்றியமைப்பதில் தாய் தந்தையர் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பது இஸ்லாத்தின் கொள்கை ஆகும்.
இதற்கேற்ப சிறுவயதில் இருந்தே பெற்றோர் இறை நம்பிக்கையையும், விசுவாசத்தையும் வளர்க்கக் கூடியவகையில் பிள்ளைகளை வழி நடாத்துவது மிக முக்கிய கடமையாகும். “நீங்கள் எல்லோரும் மேய்ப்பாளர்கள். மறுமையில் உங்கள் மேய்ப்பைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்” என்பது நபிமொழி ஆகும்.
இதன் பின்னணியில் நடைமுறைகளின் ஊடாக குழந்தையின் வாழ்வில் ஈமானை உறுதிபடுத்த முடியும் என்பது நடைமுறைச்சாத்தியமாகும்.
எனவே ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் வலது காதில் பாங்கும் இடது காதில் இக்காமத்தும் சொல்லப்பட்டு நாம் இக்குழந்தையை இறைவனின் அருளைக் கொண்டு ஷைத்தானின் தீமைகளில் இருந்து காப்பதற்காகப் பிரார்த்திக்கிறேன் என்று கூறுவதும், நபி (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஈமானின் அடிப்படைகளை ஏற்படுத்துவதற்கு ஆரம்ப கட்டமாகச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது.
உலகில் பிறக்கும் குழந்தைகள் ஒரு முஸ்லிம் ஆண், பெண்ணிற்கு முறையான விவாகத்தின் அடிப்படையில் பிறந்திருப்பினும் இதற்கு மாற்றமாகப் பிறந்ததாக இருப்பினும் அக்குழந்தை தூய இஸ்லாத்தில்தான் பிறக்கின்றது என்ற இஸ்லாத்தின் கோட்பாட்டிற்கு அமைய பாங்கும், இக்காமத்தும் சொல்லப்பட வேண்டியதன் தாற்பரியம் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பாங்கின் மூலம் அல்லாஹ்வின் மகத்துவத்தைக் கேட்கக் கூடிய சந்தர்ப்பமும் நபி (ஸல்) அவர்களின் இறுதித் தூதுத்துவத்தைச் செவிமடுக்கும் சந்தர்ப்பமும் இறைவனுக்கு பயந்தவனாக தனது வாழ்க்கையைத் தொடர தேவையான முன் ஏற்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கான அவகாசமும் அளிக்கப்படுகின்றது.
குழந்தை பிறந்த ஏழாவது நாளில் அகீகா கொடுப்பதும் அதன் தலைமயிர்களைச் சிதைத்து அதன் பாரத்திற்கு ஏற்க தங்கத்தையோ, வெள்ளியையோ ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதையும் இஸ்லாம் சுன்னத்தாக ஆக்கியுள்ளது.
அகீகா கொடுப்பது குழந்தை பிறந்ததிலிருந்து அது பரிபக்குவ வயதை அடையும் வரை நிறைவேற்றக் கூடியதாக இருப்பினும் ஏழாவது நாளில் இருப்பது ஏற்றமானது. இந்த அகீகாவில் இரண்டு ஆடுகள் ஒரு ஆண் குழந்தைக்கும், ஓர் ஆடு ஒரு பெண் குழந்தைக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதாக இஸ்லாம் குறிப்பிடுகிறது.
ஒரு குழந்தை பிறக்கும் முன்பே தாய் அக்குழந்தையை சுமக்கும் நேரத்திலேயே ஈமானின் பயிற்சி அக்குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்பதை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது.
இவ்வகையில் ஒருவர் கர்ப்பவதியாக இருக்கும் போது குர்ஆனை ஓதுவது, இறைவனின் வல்லமைகளைக் கேட்பது, அவ்வாறான பண்புகள் உள்ள நூல்களை வாசிப்பது, இஸ்லாம் கடமையாக்கியிருக்கக் கூடிய தொழுகை போன்ற முக்கிய இபாதத்களில் தன்னை ஈடுபடுத்துவது ஒரு குழந்தையின் ஆத்மீக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என இஸ்லாம் கருதுகிறது. ஒரு குழந்தை பிறந்து ஏழு நாட்களுக்குள் அல்லது அதற்கு முன்பு இறந்து போனதாக இருந்தும் கூட நல்ல பெயரை இடுவதை இஸ்லாம் கட்டாயப்படுத்தியுள்ளது.
எனவே ஏழு நாட்களின் முன் அக்குழந்தை இறந்துவிட்டாலும் அதன் பெயர் சொல்லி அடக்கம் செய்ய அது வசதியாக அமைந்துவிடும் நபி (ஸல்) அவர்கள் ஒரு தந்தையின் பொறுப்புப் பற்றிக் கூறும் போது நல்ல பெயரைப் பார்த்து லைப்பது ஒரு முக்கியமான பொறுப்பாக சொல்லி உள்ளார்கள்.
இவ்வகையில் அல்லாஹ்வுடைய திருநாமங்களை அஸ்மாஉல் ஹ¤ஸ்னாவில் இருந்து ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து அதற்கு முன்னால் அப்துல் எனும் பெயரை ஆணாக இருந்தால் இடுவதை இஸ்லாம் வரவேற்கிறது. உதாரணமாக ‘அப்துர் ரஹ்மான்’ அடுத்தபடியாக முஹம்மத் (ஸல்) அவர்களுடைய பெயர்களாக பாவிக்கப்படும் முஹம்மத், அஹ்மத், மஹ்மூத் போன்ற பெயர்களை இடுவதற்கு இஸ்லாம் ஊக்கப்படுத்தியுள்ளது. இவற்றோடு தாஹா, யாkன் போன்ற பெயர்களையும் வைக்கலாம். ஏனைய நபிமார்களின் பெயர்களை வைப்பதும் தவறில்லை.
மலிக்குள் முலூக், அப்துன் நபி, ஸஹான்ஸா, காழில் குழாத், ஜாருல்லாஹ் போன்ற பெயர்களை இடுவதை இஸ்லாம் தடுத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக அமரர்களின் பெயர்களையும் வைக்கலாம். ஆனால் மிருகங்களின் பெயர்களை வைப்பதையும் அப்துல் அர்வாஹ், ஸிஹாப், ஷர்ப் போன்ற பெயர்களை வைப்பதையும் இஸ்லாம் வரவேற்கவில்லை.
இதே போன்று இஸ்லாமிய சரித்திரத்தில் பிரபல்யமான ஸஹாபாக்கள், தாபிஈன்களின் பெயர்களை வைப்பதையும் இஸ்லாம் வரவேற்கின்றது. ஒரு குழந்தைக்கு அதன் உண்மையான பெயர் பெற்றோர்கள் பதிவோடு அனுமதிக்கும் பெயர் பட்டப்பெயர், புனைப்பெயர் வைப்பதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை.
பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை மர்யம், பாத்திமா, ஆயிஷா, கதீஜா போன்ற பெயர்களை வைப்பது ஏற்றமாகும். இவ்வகையில் ஒரு குழந்தை பிறந்தவுடன் அது ஒரு பெயரைக் கொண்டு அழைக்கப்படுவது உலகத்தில் உறவாட... அதை இனம் காண முக்கியமாக இருக்கின்றதோ! அதே போன்று அமலைப் பொறுத்து இறைவனிடம் இன்னாரின் பிள்ளை என இனம் காண்பதற்கும் தேவையாக உள்ளது.
இவ்வகையில் பெயரிடுவது இஸ்லாமிய உணர்ச்சிகளை குழந்தைகளுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து வளர்ப்பதற்கு துணை புரியக்கூடியது. ஜாஹிலியா காலத்தில் வாழ்ந்த அரேபியர் தங்கள் பிள்ளைகளுக்கு அர்த்தமற்ற சில பெயர்களையும், மிருகங்களின் பெயர்களையும் கூடாத அர்த்தம் தரும் பெயர்களையும் வைத்து அழைத்தனர்.
ஏனெனில் அவர்களிடத்தில் ஒரு கட்டுக்கோப்பான வழிகாட்டல் இல்லாது இருந்ததே காரணம். நபி (ஸல்) அவர்கள் தங்களது பேரப் பிள்ளைகளுக்கு ஹஸன், ஹ¤ஸைன் , முஹ்ஸின் போன்ற பெயர்களை வைத்து அவர்களை அர்த்தமுள்ளவர்களாக வாழ வழிசமைத்தார்கள்.
ஒரு பெயரிற்கும் அக்குழந்தையின் உள ரீதியான தொழிற்பாட்டிற்கும் இடையே முக்கிய தொடர்பு இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. இதனால் நற்பெயர் வைப்பதை இஸ்லாம் பெற்றோரின் கடமையாக்கியுள்ளது.
நாம் மேலே அவதானித்த நல்ல பெயர்களை வைப்பது அப்பிள்ளையின் எதிர்கால வாழ்விற்கு ஒரு இஸ்லாமிய வழியை அமைத்துத் தரக்கூடியதாக இருக்கிறது. (தொடரும்)